என் மகளின் பிள்ளை பிராயத்தில் அவளுக்காக நான் எழுதியது!
நிலவு வந்து உன்னைக் கெஞ்சும்
...நீலவானில் இருந்த எந்தன்
கலரை ஏன் நீ கவர்ந்து சென்றாய்
...கறுப்பாய் நானும் மாறிவிட்டேனே!
கதிரும் வந்து கையேந் தியதே
...காலை நேரமென் ஒளியை காணோம்
புதிதாய் உன்முக வொளியைக் கண்டு
...புதிருக்கிப்போ விடை கண்டேனே!
மலர்கள் கூட மருகியத தனால்
...மணத்தை நீயும் கொண்டதினாலே
புலரும் பொழுதில் மணமில்லாமல்
...பூக்களின் இதயம் சருகாகியதே!
கிளிதன் மொழியில் இனிமை சேர
...கண்ணே உன் மொழி கடன் தாவென்று
களிப்புடனென் கண்மணி அருகே வந்து
...கெஞ்சி கெஞ்சி வேண்டி நின்றதே!
மானினம் குளத்தில் குனிந்தே சொன்னது
...மீனும் நானும் விழியழகிழந்தோம்
தேனே உன்விழி அழகின் முன்னே
...தோற்றுத் துவண்டு அழுகின்றோமே!
கன்னல் அமுதே கரும்பின் சுவையே
...காரிருள் வானில் தோன்றுமந்த
மின்னலை மிஞ்சும் சிரிப்பழகோடு
...மழலையில் மனதைக் கொள்ளையிட்டாயே!!!
-சுமஜ்லா
என் கவிதைகளை மட்டும் தனித் தொகுப்பாய், இதில் பதிந்துள்ளேன்.
Thursday, July 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment