என் கவிதைகளை மட்டும் தனித் தொகுப்பாய், இதில் பதிந்துள்ளேன்.

Thursday, July 30, 2009

பிரயத்தனம்

நீ கோபமாய் இருப்பதை
எனக்குக் காட்ட
பகீரத பிரயத்தனம் செய்வது
புரிகிறது புருஷா!

தட்டி எழுப்பாமல்,
காதருகே
அலாரம் வைக்கப்பட்ட
‘செல்’லை விட்டு செல்வதும்,

காப்பி போடும் சாக்கில்,
அடுப்பங்கரையில்
அசால்ட்டாக பாலை சிந்துவதும்,

எதையோ தேடும் சாக்கில்,
எல்லாவற்றையும் இழுத்து
நடு ஹாலில் போடுவதும்,

ஹோட்டலில் மொக்கிவிட்டு,
பட்டினி கிடப்பதாய்
என்னை நம்பவைத்து
என் உள்ளத்தின் தவிப்பை
நானறியாமல் ரசிப்பதும்,

உன்னுடன் பயணிக்கையில்,
ஸ்பீடு பிரேக்கரில்
பிரேக்கடிக்காமல்
என்னைக் கலங்கடிப்பதும்,

சீரியல் பார்க்கவிடாமல்,
டி.வி. முன் அமர்ந்து
அழிச்சாட்டியம் செய்வதும்,

ஒரு வாய் நீர் குடிக்கப்பட்ட,
பிரிட்ஜ் பாட்டில்களை
மூடி திறந்த நிலையில்
ஆங்காங்கே அநாதையாக்குவதும்,

இரவில் நான் தூங்கும்வரை
வெகுநேரம் டி.வி. முன் அமர்ந்து,
இலக்கின்றி சலிக்காமல்
சேனல் மாற்றிக் கொண்டே இருப்பதும்,

பக்கத்தில் படுத்திருந்தாலும்
வேண்டுமென்றே நடுவிலொரு
தலையணை வைத்துக் கொள்வதும்,

நீ கோபமாய் இருப்பதை
கடும் பிரயத்தனப்பட்டு
எனக்குக் காட்ட,
நீ செய்யும் அலப்பரை
புரிகிறது என் புருஷா!

-சுமஜ்லா.

No comments:

Post a Comment

******************************