என் கவிதைகளை மட்டும் தனித் தொகுப்பாய், இதில் பதிந்துள்ளேன்.

Friday, April 24, 2009

சின்ன சின்ன ஆசை

மண் பானை அடுப்பேற்றி சுள்ளிக் குச்சி பொறுக்கி வந்து
கூட்டஞ்சோறு ஆக்கி அதை ருசி பார்க்க ஆசை.

கல்லா மண்ணா ஜில்லிக்கரம் பசங்களோடு கிரிக்கெட்டில்
அழுக்கான துணி கண்டு அம்மா திட்ட ஆசை.

வேப்ப மர நிழலடியில் போட்ட கணக்கு தப்பாகி
டீச்சர் எந்தன் காதை திருகி திருத்தித் தர ஆசை.

பள்ளி நேரம் முடிந்த பின்னே உடைந்து போன சாக்பீஸில்
ப்ளாக் போர்டில் டீச்சரைப் போல் எழுதிப் பார்க்க ஆசை.

ரைன் நதியின் கரையோரம் ரகசியமாய் ஒரு காதல்
என்னவரின் நெஞ்சோடு சாய்ந்து கொள்ள ஆசை.

ஊட்டி போன ஹனிமூன் நாட்கள் பதினெட்டு வயதினிலே
திரும்பக் கிடைக்க வேண்டுமென்று தினம்தினமும் ஆசை.

தாஜ்மஹாலை ரசித்த நேரம், சிம்லாவின் இனிய பொழுது
மறுபடியும் அனுபவிக்க மனம் முழுக்க ஆசை.

இந்த வருடம் போகும் ஹஜ்ஜு இனிதாக நிறைவேற
இறையோனின் அருளெனக்குப் பெற்றுக் கொள்ள ஆசை.

கைசூப்பும் பழக்கத்தை என்பையன் மறந்து விட
தாயாரின் கால்வலியும் குணமாக ஆசை.

நிலவுருக்கி நகைசெய்து நட்சத்திரக் கல் பதித்து
அழகுமகள் கழுத்தினிலே அணிவிக்க ஆசை.

மாமனார்க்கு சேவை செய்து நல்லபடி கவனிக்கவும்
சகோதரனின் மனப்பிணக்கும் சரியாக ஆசை.

முடிவாக ஒரு ஆசை அடிமனதின் ஆழத்தில்
மரணத்திலும் மச்சானுடன் இணைந்துவிட பேராசை.

சுமஜ்லா

(இந்த கவிதை எழுதியபின், என் பல ஆசைகள் நிறைவேறி உள்ளன. அதில், சகோதரனின் மனப்பிணக்கு சரியாகிவிட்டது, தாயாரின் கால்வலியும் குணமாகி விட்டது, ஹஜ் பயணமும் நல்லபடி நிறைவேறியது)

3 comments:

Thamiz Priyan said...

கடைசிக் கனவு கொஞ்சம் அதிர்ச்சியடைய வைத்தாலும் பின் நெகிழ்வையே தந்தது.

Thamiz Priyan said...

///நிலவுருக்கி நகைசெய்து நட்சத்திரக் கல் பதித்து
அழகுமகள் கழுத்தினிலே அணிவிக்க ஆசை.//
ஓவர் இமேஜினேசனோ?.. கவிதைக்கு பொய் அழகு!

SUMAZLA/சுமஜ்லா said...

ஒரு சமையல் தளத்தில், எல்லாரும் அவரவர் ஆசைகளைப் பதிய, நானும் என் ஆசைகளை கவிதை வடிவத்தில் பதிந்தேன்.

‘மரணத்தில்’ என்று எழுதாமல், ‘மரணத்திலும்’ என்று எழுதி இருப்பதன் அர்த்தம், வாழும் காலம் முழுவதும், பின் மரணத்திலும் என்பதாகும்.

இந்த ஆசைகளில் பாதி நடக்காது தானே! சிறு வயது மீண்டும் கிடைக்குமா? கிடைக்காத ஒன்றை எழுதும் போது, முடியாத ஒன்றை (நிலவில் நகை செய்தல்) எழுதக் கூடாதா?

Post a Comment

******************************