என் கவிதைகளை மட்டும் தனித் தொகுப்பாய், இதில் பதிந்துள்ளேன்.

Saturday, June 6, 2009

மனதோடு மனம்...


மனதோடு மனம் சேரும் நேரம்...

மனதோடு மனம் சேரும் நேரம்
மழைச்சாரல் இனிதாகத் தூறும்
மலர்ந்திட்ட மலர்மொட்டு பேசும்
மனம் ஏனோ துணை காண கூசும்.

கவிவெள்ளம் கரையின்றி ஊறும்,
கற்பனையும் கனவோடு சேரும்
காற்றோடு பூவாசம் கூடும்...
காதோடு தெம்மாங்கு பாடும்.

மனதோடு மனம் சேரும் நேரம்
மலர்மஞ்சம் தனைக்காணும் காலம்,
மைவிழியும் காத்திருந்து நோகும்
மதியாவும் மயங்கித்தான் போகும்.

குழலலங்கு புதுநாதம் ஊதும்,
குயில்பாட்டின் இசையோடு மோதும்
கலைமேவும் எழில் பாதை சேரும்
குலமாதர் தம் வாழ்வைக்கூறும்.

-சுமஜ்லா.

மனதோடு மனம் மோதும் நேரம்...

மனதோடு மனம் மோதும் நேரம்
மணமிழந்த மலர் போல வாடும்,
மடைவெள்ள மாய்கண்ணீர் ஓடும்
மனமிப்போ நிம்மதியைத் தேடும்.

உள்ளத்தில் உருவான சோகம்
உச்சத்தில் உள்மனது நோகும்,
உதயத்தைக் காணாமல் தேகம்
உருக்குலைந்து உருகித்தான் போகும்.

மனதோடு மனம் மோதும் நேரம்
மதுதேனும் கசப்பாக மாறும்!
மண்ணோடு விஷவித்தை ஊன்றும்,
மலரெல்லாம் சருகாகத் தோன்றும்.

உற்சாகம் வடிந்தோடிப் போகும்
உலைக்கலமாய் மனம்யாவும் வேகும்
உயிரோடு உடல் சோகம் தாங்கும்,
உறக்கத்தை தொலைத்திட்டு ஏங்கும்.

-சுமஜ்லா

No comments:

Post a Comment

******************************