என் கவிதைகளை மட்டும் தனித் தொகுப்பாய், இதில் பதிந்துள்ளேன்.

Thursday, March 5, 2009

மலர்ந்தும் மலராமல் மறைந்து முடிந்திட்ட மகளின் கதை கேளுங்கள்




இது என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம்.


வயிற்றில் பூத்த ரோஜா மலரே வாடிப் போன தேனோ
வசந்தம் பொங்கும் ஜீவ நதியும் வற்றிப் போன தேனோ
மாணிக்க தொட்டில் கட்ட மனதினிலே நினைத்திருந்தேன்.
மண்ணறையைத் தேடி நீயும் மறைந்து போன மர்மமென்ன

கருவான நாள் முதலாய் கற்பனைகள் பலகோடி
கற்கண்டே கசப்பாக கரைந்துவிட்டாய் கண்மணியே
உதிரத்தின் உறவே என் உயிர் சோகம் புரியாதோ
புதிரானாய் புவியினிலே புன்னகையை மறந்தேனே

கண்விழிக்கும் முன்னே உன் கண்மூடிப் போனாயே
கண்ணே உன் தாய் முகத்தைக் காணும்முன்னே அவசரமோ
ஆறு திங்கள் தாய்ப்பாசம் ஆழ்மனதில் சுமந்திருந்தேன்
மாறுபடா திருந்திருந்தால் மடியினிலே சுமந்திருப்பேன்.

யாரு கண்ணு பட்டதினால் எங்க கிளி மறைந்ததுவோ
வேறு வழி இல்லையிங்கே வேதனையில் துடிக்கின்றேன்.
கை நிறைய கண்மணியை கனவினிலே கண்டிருந்தேன்
கண்ணிறையக் கண்ணீரை காணிக்கையாய் நீ தந்தாய்

உன் அக்கா இரு விழியில் கனா தேக்கிக் காத்திருக்க
அனுதினமும் ஆசைமுத்தம் வயிற்றின் மீது ஈந்திருக்க
முத்த ஈரம் காயும் முன்னே முடிவாகிப் போனாயே
இரத்த பந்த உறவுகளை இரணமாக்கிச் சென்றாயே

இறை ஏனோ உன் உடலில் குறை ஏதோ வைத்திட்டான்
மறைவான அவன் நாட்டம் மனிதர்களும் அறியாரே
மஹ்ஷரிலே வந்துவிடு மயில்கரத்தில் நீரேந்தி
மறையோனின் கிருபையாலே அதுவரைக்கும் பொறுத்திருப்பேன்.

நான் பொரித்த பெட்டைக் குஞ்சு நானிலத்தின் மடியினிலே
வான் மழையாய் பொழியுதம்மா என்கண்ணீர் துளிகளுமே
மண்ணறையின் மேல் நனையும் அம்மழையின் சாரலினால்
என்கரத்தில் துயில்வதுபோல் நீள்தூக்கம் கொண்டிடுவாய்

நெஞ்சத்திலே மஞ்சம்தந்து கொஞ்சிட நான் காத்திருக்க
தஞ்சமென கவினமுது கப்ருக்குள்ளெ அடங்கிவிட்டாய்
இங்கிருந்தே தாலாட்டு உனக்காக பாடுகிறேன்
சொர்க்கத்துப் பூஞ்சிட்டே சுகமாக நீயுறங்கு!

சுமஜ்லா

4 comments:

Unknown said...

"பொருமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்"

நான் சிறுவனாக இருந்த போது என் மூத்த சகோதரிக்கு இரண்டு முறை 8 மாதத்தில் அக்குழந்தையை அல்லாஹ் அழைத்துக்கொண்டான்;

என் சகோதரியின் மனச்சுமை எப்படி இருந்து இருக்கும் என்பதை உங்கள் கவிதை உணர்த்தியது...

உங்களுக்கு அல்லாஹ் அருள் செய்வான்!

Anonymous said...

இதை எழுதும் போது, குழந்தை என் வயிற்றில் துடித்துக் கொண்டிருந்தது. ஆனால், அடுத்த 2 நாட்களில் அது இறந்து விடும் என்று சொல்லிவிட்டார்கள், காரணம் கருப்பையில் நீர் இல்லையாம் “வற்றாத ஜீவ நதியும், வற்றிப் போனதேனோ”

“நான் பொரித்த பெட்டைக்குஞ்சு” என்று வரும் 4 வரிகள் மட்டும், குழந்தை பிறந்த பின் சேர்த்தது.
ரொம்ப அனுபவித்து எழுதிய கவிதை இது.

எழுதிய கவிதையை படித்து படித்து அழுது கொண்டிருந்ததைப் பார்த்த என் தாய், அந்த டைரியை பிடுங்கி வைத்துக் கொண்டார். வெகு நாட்களுக்கு பின் தான் திருப்பித் தந்தார்.

“இங்கிருந்தே தாலாட்டு” என்ற வரிகளை இன்று படித்தாலும், விழியோரத்துளி எட்டிப் பார்க்கும்.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்..
//இங்கிருந்தே தாலாட்டு உனக்காக பாடுகிறேன்
சொர்க்கத்துப் பூஞ்சிட்டே சுகமாக நீயுறங்கு!// இதை கேட்டுக்கும் பொழுது என் கண்காளும் கலங்கிவிட்டது...அல்லாஹ் எல்லாமே நல்லதை தான் நாடுவான்..

raffik said...

no words to say

Post a Comment

******************************